ஒன்றிணைந்த எதிரணியினால் ஏற்பாடு செய்த “மக்கள் சக்தி கொழும்புக்கு” பேரணியில் கலந்து கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய ஜகத் விமலசூரிய என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த நபர் மாளிகாவத்தை இலிருந்து பேரூந்தில் இருந்து இறங்கி வந்ததாகவும், பின்னர் தனக்கு சுகயீனம் போல் உள்ளதெனக் கூறி மீண்டும் பேரூந்துக்கு சென்றதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
பின்னர் மாலை 6.15 மணியளவில் பேரூந்துக்கு சென்று பார்க்கையில் ஆசனத்தில் உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவரது மனைவி வீட்டுப் பணிப்பெண்ணாக வெளிநாட்டில் பணி புரிவதாகவும் அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது தேகமானது இன்று(06) பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்றைய(05) ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களில் உணவு விசமானதில் 33 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 08 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.