அவுஸ்திரேலியா– மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்து வருகிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 258 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
இதில் ஸ்டீவ் சுமித் 135 ஓட்டங்களும், வாட்சன் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2வது நாள் ஆட்டம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுமித் இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 199 ஓட்டங்களில் டெய்லர் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.
இதன் மூலம் 199 ஓட்டங்களில் ஆட்டமிழந்தவர்கள் வரிசையில் சுமித் 8வதாக இணைந்துள்ளார்.
இதற்கு முன் முடாசர் நாசர் (பாகிஸ்தான்), முகமது அசாரூதின் (இந்தியா), மேத்யூ எல்லியட் (அவுஸ்திரேலியா), சனத் ஜெயசூரியா (இலங்கை), ஸ்டீவ் வாக் (அவுஸ்திரேலியா), யூனிஸ்கான் (பாகிஸ்தான்), இயான் பெல் (இங்கிலாந்து) ஆகியோர் டெஸ்ட் போட்டியில் 199 ஓட்டங்களில் பரிதாபமாக ஆட்டமிழந்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 399 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியாவின் அபாரமான பந்துவீச்சில் திணறியது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்து 256 ஓட்டங்கள் பின்தங்கி இருந்தது.
அதிகபட்சமாக பிளாக்வுட் (51) அரைசதம் எடுத்தார். ஹாசில்வுட், லயன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அந்த அணி பாலோ–ஆனை தவிர்க்க போராடி வருகிறது.