பணிவுக்கு பணிவாகவும், விசுவாசத்துக்கு விலாசமாகவும் இருந்த ஓ.பன்னீர் செல்வம் இப்படி அதிரடி விஸ்வரூபம் எடுப்பார் என்று சசிகலா ஒருபோதும் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்.
தமிழக அரசியலில் 15 ஆண்டுகள் அமைச்சராகவும், 20 ஆண்டுகள் எம்எல்ஏ-ஆகவும் பதவி வகித்த ஓ. பன்னீர்செல்வம் 3 முறை தமிழக முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இவருக்கு இரண்டு முறை பதவி வழங்கப்பட்டது.
தனக்கு வழங்கப்பட்ட முதல்வர் பதவியை ஜெயலலிதாவின் கண்ணசைவிலேயே கையாண்டு வந்தார் ஒபிஎஸ்.
எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக துணிந்து எடுக்காமல், சொல்பவற்றை கேட்டு பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்ததால், தமிழக அரசு செயல்பாடத அரசு என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
அதனையெல்லாம் கண்டுகொள்ளாத இவர், எல்லாம் அம்மாவின் ஆணைக்கிணங்க தான் நடக்கும் என திட்டவட்டமாக கூறிவந்தார்.
இவரின் உண்மையான விசுவாசமே முதல்வர் பதவிக்கு வழிவகுத்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
டிசம்பர் 5 ஆம் திகதி அம்மாவின் மறைவுக்கு பின்னர், 3 வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற இவர், துடிப்புடன் செயல்பட்டு தனது திறமையை தமிழகத்திற்கு நிரூபிப்பாரா என பலவேறு தரப்பில் இருந்தும் எதிர்பார்க்கப்பட்டது.
அதனை நிரூபிப்பதற்கு தானாக வந்தது இயற்கையின் சீற்றமான வர்தா புயல் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டம். இவை இரண்டையும் மிக அருமையாக கையாண்ட ஒபிஎஸ்க்கு மக்கள் மத்தியில் மட்டுமல்லாது எதிர்கட்சிகள் தரப்பிலும் நல்ல மரியாதை கிடைத்தது.
தமிழகத்தின் முதல்வர் மறைந்துவிட்டாலும், கட்சிக்குள் ஏற்பட்ட பல்வேறு குழறுபடிகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல், வெள்ளந்தி சிரிப்போடு பத்திரிகையாளர்களை கையாண்டு வந்த பன்னீர் செல்வம், திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, ஜெயலலிதாவோடு 33 ஆண்டுகளாக இருந்து வந்த காரணத்தினால் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்தபடியாக சசிகலாவை முன்மொழிந்தது தமிழக அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி தமிழக அரசியல் என்னதான் நடந்துகொண்டு இருக்கிறது? என தமிழக மக்கள் சிந்தித்துக்கொண்டிருக்க, யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பமாக, அதிரடி விஸ்வரூபம் எடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து அதிமுக கட்சிக்குள் நடப்பவை குறித்து வெளியிட்டுள்ளார் பன்னீர் செல்வம்.
பன்னீர் செல்வத்தின் இந்த பேட்டி குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் பாராட்டிக்கொண்டிருக்க, மறுபக்கம் சமூகவலைதளங்களில் ஒரே நாள் இரவில் ஹீரோ ஆகிவிட்டார். இவரை பாராட்ட மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இதில், முக்கியமான டுவிஸ்ட் என்னவென்றால், நான் பொதுச்செயலாளர் மற்றும் முதல்வாக வரவேண்டும் என பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டார், அதனால் தான் நான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என கூறிவந்த சசிகலா, பன்னீர் செல்வத்தின் இந்த அதிரடி மாற்றத்தை ஒருபோதும் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
மௌன ராஜாவாக, தன்னடக்கத்தோடு வலம் வந்த பன்னீர் செல்வத்தை சமாளிப்பது என்பது எளிதான ஒன்று, பெரும்பான்மை அமைச்சர்கள் தனக்கு சாதகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தனது கணவர் நடராஜன் உதவியோடு முதல்வர் நாற்காலிக்கு காய் நகர்த்திய சசிகலாவுக்கு இடிவந்துள்ளது.
அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களை தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மக்களை மாக்காளாய் பார்த்த காரணத்தினால், தனக்கு எதிராக எழுந்த எதிர்ப்புகளை கண்டுகொள்ளாத இவர், அதிமுக தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாது ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாக இருந்து வந்த பன்னீர் இப்படி மாறிவிட்டாரே என கலக்கத்தில் உள்ளார்.