ஒரே விளம்பரத்தால் மனம் மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன்

திமுக நேற்றும் இன்றும் வெளியிட்டுள்ள பத்திரிகை விளம்பரங்களில் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா?

‘என்கிற தொலைக்காட்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனின் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,”இந்த வார்த்தைகள் ஒரு மந்திரச் சொல். என்னிடம் இருந்து தன்னெழுச்சியாக வந்த இந்த வார்த்தைகளை கிண்டலடிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் நீதிமன்றத்தை அணுகியதோடு நியாயமும் கேட்டேன்.

எனது அணுகுமுறையால் பிரிந்து கிடந்த ஆயிரக்கணக்கான உறவுகளை இணைத்து வைத்தேன். அந்த வார்த்தைகளுக்கு அப்படி ஒரு வீரியம் இருந்தது. அதனை உணர்ந்து பார்த்தால்தான் தெரியும். சினிமாவில் கூட இந்த வார்த்தைகளை பயன்படுத்தி பாடலே எடுத்து விட்டனர். என்னை அதில் சம்பந்தப்படுத்தவில்லையென்றாலும் கேலியாக அவை பயன்படுத்தப்பட்டதால், நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இப்போது அந்த வார்த்தைகள் அரசியலாகியிருக்கின்றன. எந்த கட்சியையும் நான் சார்ந்து இல்லை. இப்போது அந்த வார்த்தைகள் நியாயத்தின் குரலாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது குறித்து எனக்கு மகிழ்ச்சிதான். அதற்காக நான் அந்த கட்சிக்கு ஆதரவானவள் என சாயம் பூசி விட வேண்டிய அவசியம் இல்லை. நியாயத்தின் குரலாக யார் பயன்படுத்தினாலும் நான் வரவேற்பேன். இந்த வார்த்தைகளுக்காக நான் உரிமையும் கொண்டாவில்லை” என்றார்.

(நன்றி- விகடன்)