கஜ புயல் – இன்று காற்றுடன் மழை…

கஜ புயல் இன்று அதிகாலை தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூறாவளி அடுத்து வரும் ஆறு மணித்தியாலங்களில் நலிவடைந்து மேற்குத் திசை நோக்கி நகருமென எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த இந்த சூறாவளி காரணமாக வடக்கு வடமத்திய மாகாணங்களிலும், புத்;தளம் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று அதிகாலை காற்றுடன் மழை பெய்யலாம் எனவும், யாழ்ப்பாண குடநாட்டில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சமயங்களில் காற்றின் வேகம் 100 கிலோமீற்றர வரை அதிகரிக்க கூடும்.

யாழ் குடாநாட்டிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்கப்படுகிறது. திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை – மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடலில் மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம். காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீற்றர் வரை அதிக்க கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பதாக மாறக்கூடும்.

கஜ சூறாவளியின் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை – மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொலைபேசி ஊடாக அவசர உதவிகளைப் பெறலாம் இதற்காக அழைக்க வேண்டிய இலக்கம் 117 என்பதாகும்.