கஞ்சிபானி இம்ரானுடன் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்

(FASTNEWS | COLOMBO) – கஞ்சிபானி இம்ரானுடன் தொடர்புகளை பேணியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானுடன், அந்தப் பிரிவின் அதிகாரிகள் சிலர் தொடர்பு வைத்துள்ளதாக மாகல்கந்தே சுதந்த தேரரால் முறைப்பாடு முன்வைக்கப்பட்ட நிலையில்,
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையின் கீழ் குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள உப பொலிஸ் பரிசோதகர்கள் மூவரும் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு குறித்த மூவரும் இடமாற்றம் செய்யப்பட்டதாக ஊடகப்பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சர்கள் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.