வெளிநாட்டு கடவுச்சீட்டை மீள ஒப்படைக்காமை குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவிற்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிகிச்சைக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பிய துமிந்த உரிய திகதியில் கடவுச்சீட்டை மீள ஒப்படைத்திருக்கவில்லை.
இது குறித்து கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான்கள் நேற்று(07) எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் கொலை தொடர்பான வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய விஷேட நீதவான் குழுவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் 11ம் சந்தேக நபராக துமிந்த சில்வா பெயரிடப்பட்டு, துமிந்த சில்வா வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு துமிந்த சில்வா சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் கோரி வெளிநாட்டுக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டார்.
கடந்த 1ம் திகதி குறித்த கடவுச்சீட்டை நீதிமன்றில் மீளவும் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
எனினும், துமிந்த சில்வா உரிய திகதியில் கடவுச்சீட்டை ஒப்படைக்காது நேற்று கடவுச்சீட்டுடன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
2ம் திகதி கடவுச்சீட்டை பதிவாளரிடம் ஒப்படைத்த போதிலும் காலம் கடந்து விட்டது ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியதனால் இன்று சமர்ப்பிப்பதாக சட்டத்தரணி கூறியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் உரிய தினத்தில் கடவுச்சீட்டு ஒப்படைக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பாரத கொலை வழக்கு இன்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.