ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையே விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளைகளை நோக்கில் கொண்டே இச்சந்திப்பு நடத்தப்படுவதாக தெரியவருகிறது.
நாடாளுமன்றத்தைக் கலைப்பது, 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது, நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகிய விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அமைச்சர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, பொதுச் செயலாளர் கபீர் ஹசீம், தவிசாளர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்து, அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, 20ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிய உடன் நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்தும் ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் புதிய அரசாங்கத்தை நிறுவுவதாக ஜனாதிபதி தற்போது சர்வதேசத் தலைவர்களுக்கும், பகிரங்கமாக மக்களுக்கும் அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
எவ்வாறாயினும், தேர்தலுக்கான வேட்பு மனுக் கோரல் மற்றும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தினம் ஆகியவற்றை இறுதியாக ஜனாதிபதியே தீர்மானிப்பார் எனக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது இந்த திகதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.