கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட பேரணி…

கட்டலோனியா தனிநாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சிலோனாவில் நேற்று(29) நடைபெற்ற பேரணியில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர்.

ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமான கட்டலோனியா தனிநாடாக பிரிவது குறித்து நடத்தியிருந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித மக்கள் ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தனிநாடு பிரகடனம் செய்தது. ஸ்பெயினில் இருந்து பிரிந்து சுதந்திர கட்டலோனியா பிறந்து விட்டதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தனிநாடு பிரகடனம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கட்டலோனியா பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக ஸ்பெயின் அறிவித்தது. மேலும், கட்டலோனியா நிர்வாகம் ஸ்பெயினின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலும் டிசம்பர் மாதம் 21-ம் திகதி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் கட்டலோனியா தலைவர் பியூங்டிமோண்ட் போட்டியிட வேண்டும் என ஸ்பெயின் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து கட்டலோனியா பாராளுமன்றத்தை கலைத்து அதை நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ஸ்பெயின் அரசை எதிர்த்து அமைதியான வழியில் போராடுமாறு தனிநாடு ஆதரவாளர்களுக்கு பியூங்டிமோண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கட்டலோனியா சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஸ்பெயினுக்கு ஆதரவாகவும் கட்டலோனியாவின் பார்சிலோனா நகரில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அவர்கள் ஸ்பெயின், ஐரோப்பிய யூனியன் மற்றும் கட்டலோனியா கொடிகளை கையில் வைத்திருந்தனர். அதோடு ஸ்பெயினுக்கு ஆதரவாக கோஷங்களையும் எழுப்பினர்.