கட்டாரிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் கட்டாரின் ஆட்சியாளர் தமீன் பின் அஹமட் அல் தானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று(26) இடம்பெற்றது.
சகல துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை விரிவுபடுத்தி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக அரச தலைவர்கள் இதன்போது விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
சகல துறைகளிலும் இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக கண்டறிய இருநாட்டு பிரதிநிதிகளையும் கொண்ட குழுவொன்றினை நியமித்து அச்செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள், மின்சக்தி, நீர் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் நிதி துறைகளில் காணப்படும் தொடர்புகளை மேம்படுத்தத்தக்க 07 புதிய உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.
இரு நாடுகளின் தூதுவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் விசேட கடவுச்சீட்டு உடையவர்கள் வீசா பெற்றுக்கொள்ளாது நாடுகளிற்கு உட்பிரவேசிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாக கைச்சாத்திடப்பட்டது.
கட்டார் வெளிவிவகார அமைச்சர் Sheikh Mohamed Bin Abdur Rahman Al Thani மற்றும் இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளின் தூதரக அலுவலர்களுக்கான பயிற்சி மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கையிலும், இலங்கையில் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்குவதற்கான உடன்படிக்கையிலும் இவர்கள் இதன்போது கைச்சாத்திட்டனர்.
மின்னுற்பத்தி துறைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கட்டாரின் மின்சக்தி மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர் Dr. Mohamed Bin Salih Al Sada மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கை சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்டாரின் பெருநகரங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சர் Mohamed Bin Abdullah Al Rumaihi ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவை பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அந்நாட்டின் பொதுமக்கள் சுகாதார அமைச்சர் Dr. Hanan Binth Mohamed Al Kuwari ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நிதிச் செயற்பாடுகள் தொடர்பான ஆய்வுகளுக்கான தகவல்களை பரிமாறிக் கொள்ளல் தொடர்பாக கட்டார் நிதி தகவல்கள் பிரிவு மற்றும் இலங்கையின் நிதிச் செயற்பாடுகள் பற்றிய விசாரணை அலுவலகம் என்பவற்றுக்கிடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கை நிதி புலனாய்வுப் பிரிவின் கலாநிதி எச். அமரதுங்க மற்றும் குவைத்தின் நிதி தகவல்கள் பிரிவின் தலைவர் Sheikh Ahmed Bin Eid Al Thani ஆகியோர் கைச்சாத்திட்டனர்.