ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய முக்கிய வழிபாடுகளுக்கு மக்காவிலுள்ள அல்லாஹ்வின் வீடு அனைவருக்கும் திறந்தே இருக்கும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
கட்டார் வாழ் மக்களுக்கு ஹஜ் மற்றும் உம்ரா வழிபாடுகளை மேற்கொள்ள சவுதி அரசாங்கம் தடை விதித்துள்ளதாக வெளியாகிய செய்திக்கு சவுதி அரேபியா மறுப்புத் தெரிவித்தே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
சவுதி நாட்டின் எல்லைக்குள் நுழைந்த பின்னர் அவர்களின் இனம், மொழி, நாடு என்பன பார்க்கப்படுவதில்லை. அவர்கள் விருந்தாளிகளாகவே பார்க்கப்படுவதாகவும் சவுதி செய்திகள் தெரிவித்துள்ளன.
மக்காவுக்குள் வரும் அனைவரும் சமமானவர்களாகவே நோக்கப்படுகின்றனர்.
இதேவேளை, கட்டார் மக்களின் ஹஜ், உம்ராவுக்கு சவுதி தடைவிதித்துள்ளதாக வெளியாகிய செய்திக்குரிய அழகியதொரு பதிலாகவே சவுதியின் இந்த மறுப்பு காணப்படுகின்றது. சவுதி அரசாங்கத்துக்கு உலகளவில் ஏற்படும் அவப்பெயருக்கு ஒரு பதிலாகக் கூட இந்த தகவலைக் கொள்ளலாம்.
அத்துடன், நாட்டு நிருவாக சட்டதிட்டங்களுக்கு அமையவே வருபவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி தற்பொழுது கட்டாருடன் உள்ள சகல விதமான தொடர்புகளையும் துண்டித்துள்ள நிலையில் சவுதியின் தற்போதைய சட்டம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. கட்டார் நாட்டவர்கள் மக்காவுக்குள் வருவது பிரச்சினைக்குரிய ஒன்றல்ல என சவுதி அறிவிப்பதாயின் எல்லைகளை ஏன் மூடிவிட வேண்டும். விமான சேவைகளை ஏன் இரத்து செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.