கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் கெய்ல் தலைமையிலான ஜமைக்கா தல்லாவாஸ் அணியும், எம்ரிட் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் தலைவர் கிறிஸ் கெய்ல் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி ஜமைக்கா அணியின் பந்துவீச்சில் திணற ஆரம்பித்தது.
அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களே எடுத்தனர். இதனால் 16.1 ஓவரிலே அந்த அணி 93 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சொஹாலி தன்வீர் 42 ஓட்டங்கள் எடுத்தார்.
ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் சார்பில் இமாத் வாசிம் 3 விக்கெட்டுகளும், சாகிப், கேஸ்ரிக் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்நிலையில் 96 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது ஜமைக்கா தல்லாவாஸ் அணி.
தொடக்க வீரர்களாக அணித்தலைவர் கிறிஸ் கெய்ல், வால்டன் களமிறங்கினர்.
கிறிஸ் கெய்ல் தனது ‘சூறாவளி’ ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் 27 பந்தில் 6 சிக்சர், 3 பவுண்டரி என 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் வால்டன், குமார் சங்கக்கார இணைந்து அணியை வெற்றி பெற வைத்தனர். இதனால் அந்த அணி 12.5 ஓவரிலே 1 விக்கெட் இழந்து 95 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
குமார் சங்கக்கார 12 ஓட்டங்களுடனும், வால்டன் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
4 ஓவர்கள் வீசி 21 ஓட்டங்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீ்ழ்த்திய ஜமைக்கா அணியின் இமாத் வாசிம் ஆட்ட நாயகன் விருதையும், ஆன்ட்ரே ரஸல் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.


