கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் தொடர்பில் இன்று பரிசோதனை…

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்று(14) காலை தமது சபையின் குழுவொன்றை புத்தளத்திற்கு அனுப்பவுள்ளதாக கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமையாளர், பேராசிரியர் ரேனி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பரிசோதனைகள் முன்னெடுக்கும் வரை கடற்கரையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் உடப்பு தொடக்கம் – தொடுவாய் வரையான சுமார் 10 கிலோமீற்றர் வரையான கடற்கரையில் மருத்துவ கழிவுப்பொருட்கள், கண்ணாடி போத்தல்கள், பொலித்தீன் போன்ற கழிவுப் பொருட்கள் அதிகளவில் கரையொதுங்கியுள்ளன.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இந்தக் கழிவுப் பொருட்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் இந்திய லேபல் பொறிக்கப்பட்ட கழிவுப் பொருட்களே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.