ஊழல் பணப்புழக்கத்திற்கு எதிராக தீர்வொன்று எட்டப்பட ரூ.5,000 தாளினை தடை செய்ய வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று(21) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.
அவ்வாறாயின், கறுப்புப் பணத்தினை தம்மிடம் வைத்திருப்பது ராஜபக்ஷர்களா இல்லை மத்திய வங்கி ஆளுநரா என்பது சந்தேகமின்றி தெரியவரும் எனவும் அவர் கூறியிருந்தார்.
“ஊழல் செய்யப்பட்ட பணத்தினை; தங்கம்,மாணிக்கம், முத்து மற்றும் வைரங்கள் என பல்வேறு வழிகளில் ஊழல்வாதிகள் சம்பாவித்து வைத்துள்ளனர். இலங்கையின் அரச சொத்துக்கள் களவாடப்பட்டு கறுப்புப் பணமாக பதுக்கி வைத்திருப்பது ராஜபக்ஷர்களா, இல்லையேல் மத்திய வங்கி கொள்ளையர்களா என்பதனை அறிய கட்டாயம் 5000 ரூபா பணத்தாள் தடை செய்யப்பட வேண்டும்.
மேலும், இதுவொன்றும் புதிய விடயமல்ல. கடந்த 1973ல் அக்கால நிதியமைச்சர் என்.எம்.பெரேரா அவர்களது காலத்தில் 100ரூபா தாளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது” எனவும் உதய கம்மன்பில மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.