கறுவாப்பட்டை இறக்குமதி, மீள் ஏற்றுமதியினை தடைசெய்ய அமைச்சரவை அனுமதி.

கறுவாப்பட்டை இறக்குமதியையும், மீள் ஏற்றுமதியையும் தடைசெய்ய இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கறுவாப்பட்டையை பல நிறுவனங்கள் உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததைத் தொடர்ந்தே குறித்த இந்தத் தடையை அமைச்சரவை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.

சிறுதொழில் அமைச்சு, சுங்க இலாகாவின் பதிவுகளுக்கு இணங்க  2016இல் கறுவாப்பட்டை நிரப்பப்பட்ட நான்கு கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டு மடகஸ்காருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிகழ்வுகள் இலங்கையின் கறுவாப்பட்டை வர்த்தகத்தை உலக சந்தையில் பெருமளவு பாதிக்குமென அமைச்சரவை நம்புகின்றது. அது மாத்திரமல்ல இறக்குமதியான கறுவாப்பட்டை மீள் ஏற்றுமதிக்காக வெளிநாடு அனுப்பப்படும் போது இலங்கை உற்பத்தியாக பொதி செய்யப்பட்டு அனுப்பப்படுவதையும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கறுவாப்பட்டை ஏற்றுமதியால் ஏறத்தாழ 132 மில்லியன் டொலர் வருமானத்தை கடந்த சில வருடங்களில் ஈட்டியுள்ள இலங்கை, வாசனைத் திரவியங்களுள் கறுவாப்பட்டையே அதிவிலை உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.