கல்விப் பொ.உ.பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத் வாழ்த்து

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாட் தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழும் வன்னி மாவட்ட மாணவர்கள் தேசிய ரீதியில் உயர்தர பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளை பெறுவது ஏனைய மாணவர்களுக்கு உத்வேகத்தையும், உற்சாகத்தையும் வழங்கும் என தான் பெரிதும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

முசலி பிரதேசத்தின் கல்வி வரலாற்றில் முதன் முறையாக (3A) சித்திகளையும் அதிகூடிய z scoreரையும் பெற்று சாதனை படைத்த கலைப்பிரிவு மாணவி றஸ்வினா பேகத்துக்கு தனது விசேட பாராட்டுக்களையும் மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டார்.

அதே போன்று மன்னார் மாவட்டத்தில் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்கள் ஒருவர் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளார், இதே போன்று வன்னி மாவட்டத்திலும் புத்தளத்திலும் கல்வி கற்ற பல மாணவர்கள் நல்ல பெறுபேறுகளைப்பெற்றுள்ளனர் இந்த மாணவர்களை எவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் கற்பித்து ஆளாக்கிய ஆசிரியர்களையும் அவர்களுக்கு வழி காட்டிய பெற்றோர்களையும் நான் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுவதோடு அவர்களின் மகிழ்ச்சியிலும் இணைந்துகொள்கின்றேன்.

கடந்த 25 வருடங்களாக வன்னி மாவட்ட மாணவர்கள் அகதி முகாம்களில் காலத்தை கடத்தியதால் கல்வியிலே மிகவும் பின்தள்ளப்பட்டுள்ளோம் எனினும் கல்வியிலே நாம் கொண்ட கரிசனையால் ஏனையோர்களுடன் ஓரளவு போட்டிபோட முடிந்தது. என்ன தான் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் கல்வியிலே அக்கறைசெலுத்துவதன் மூலமே நமது சமூகம் உயர்வான நிலையை அடையும்.

இன்று வெளிவந்த பெறுபேறுகளிள் தாம் எதிர்பார்த்த நிலையை,புள்ளிகளை பெற்றுக்கொள்ள தவறிய மாணவர்கள் தொடர்ந்தும் கல்வியைக் கற்று நல்ல பெறுபேறுகளைப்பெற்று சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப்பெற வேண்டும் என பிராத்திக்கின்றேன்.