களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவு

(FASTNEWS|COLOMBO) – மொரகஹகந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்திற்குரிய பிரதான நீர்த்தேக்கங்களுள் ஒன்றான களுகங்கை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப்பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் எதிர்வரும் மாதமளவில் அதன் பூரண நன்மைகளை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(24) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

தற்போது, மொரகஹகந்த திட்டத்திற்கு உரித்தான வட மேல் நீர்த்தேக்கம், கிழக்கிற்கு நீரைக் கொண்டுசெல்லும் மேல் எலஹெர தேக்கம் மற்றும் மினிப்பே ஆகிய நீர்த்தேக்கங்களின் நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மொரகஹகந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பொறியியலாளர்கள், திட்டமிடல் அதிகாரிகள், தொழிநுட்ப அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வரையிலான அனைவருக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.