காங்கேசன்துறை சீமெந்து ஆலை நிதி மோசடி தொடர்பில் கோதபாய’விடம் விசாரணை..

காங்கேசன்துறை சீமெந்து ஆலையில் இடம்பெற்ற பல கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட சில முன்னாள் உயர் படையதிகாரிகளிடம் குறித்த இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது. காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் இயந்திர சாதனங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பழைய இரும்பாக பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த மோசடி தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்கவிடம் கடந்த 7ம் திகதி விசாரணை நடத்தப்பட்டிருந்தது.

இந்த விசாரணைகளின் போது சாட்சியமளித்த தயா ரத்நாயக்க, தமது உத்தரவினை மீறி இயந்திர சாதனங்கள் வெட்டப்பட்டு பழைய இரும்பிற்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)