காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை…

காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு உரிய திரளவியங்களை பரிமாறிக் கொள்ளும் பணியினை மேற்கொள்வதற்காக காங்கேசன்துறை துறைமுகம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆறு மீற்றர் ஆழத்தைக்கொண்ட இந்த துறைமுகத்தில் 2500 தொன் எடை சரக்குகளை கொண்ட கப்பல்களை மாத்திரமே கையாளமுடியும்.

இதற்கு தேவையான 50 ஏக்கர் காணியினை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திடம் இருந்து இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் துறைமுக மற்றும் கப்பல்துறை விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த துறைமுகம் இந்திய துறைமுகத்திற்கு அருகாமையில் இருப்பதினால் சர்வதேச கடல்நடவடிக்கை மற்றும் அதனுடனான தொடர்புகள் பிரதேச அபிவிருத்தி மற்றும் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கிற்கு தேவையான சேவைகளை வழங்கி பிராந்திய துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு வாய்ப்புண்டு. இதற்கமைவாக இந்த துறைமுகம் மறுசீரமைப்பு செய்யப்படவுளளது.

குறித்த துறைமுகத்தினை மறுசீரமைப்பு செய்வதற்காக முன்மொழிவுகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்வைத்துள்ளது. இத்துறைமுகத்தினை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.