காங்கோவில் மீண்டும் பரவும் இபோலா வைரஸ் – 23 பேர் உயிரிழப்பு…

காங்கோ நாட்டில் மீண்டும் பரவத் தொடங்கிய இபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் கடந்த சில தினங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய இபோலா வைரஸ் நோய், உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் முதலில் 2013-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவியதுடன், 2016-ம் ஆண்டு வரை இந்த வைரஸ் நோய்க்கு 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும், இந்த வைரஸ் நோய் பரவி வருவதை காங்கோ நாட்டின் சுகாதார மந்திரி ஒலி இலுங்கா கலிங்கா உறுதி செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 52 பேரை இந்த நோய் தாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை, அந்த நாட்டுக்கு 4 ஆயிரம் பேருக்கு செலுத்தத்தகுந்த இபோலா வைரஸ் தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் சோதனை ரீதியில் அனுப்பி வைத்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.