காட்டு யானைகள் ரயிலுடன் மோதுவதை தடுப்பதற்காக ஐந்து சிபாரிசுகளை சமர்பிப்பு…

காட்டு யானைகள் ரயிலுடன் மோதுவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு தனது பணிகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை முதல் மஹாவ ரயில்வே தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம், தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை வரையிலான வடக்கு பகுதியிலும், கிழக்கு ரயில் பாதையிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

திருகோணமலை பாதையிலும் மட்டக்களப்பு பாதைக்கு அருகிலும் யானைகளின் நடமாட்டம் குறித்து பெற்றுக்கொண்ட தரவுகள் மற்றும் தகவல்களுக்கு அமைவாக காட்டு யானைகள் ரயிலுடன் மோதும் சம்பவங்களை தடுப்பதற்காக ஐந்து சிபாரிசுகளை சமர்ப்பித்துள்ளனர்.

ரயில் சாரதிகளுக்கு பாதை தெளிவாக தெரியும் வகையில் பாதையின் இருமருங்கிலும் 30 மீற்றர் வரையில் காட்டுப்பகுதியை அகற்றுவதற்கும் இந்த பகுதியில் ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

பாதையின் இரண்டு பக்கமும் உள்ள உயர்ந்த பகுதிகளில் யானைகள் செல்வதற்கு வசதியாக பாதையை அமைப்பதற்கும் ரயில் பாலம் மற்றும் மதகுடன் கூடிய இடங்களில் யானைகள் செல்வதற்குள்ள தடைகளை நீக்கி, சீரான பாதைகளை நிர்மாணித்தல், ரயில் பாதைகளில் யானைகள் பிரவேசிக்கும் இடங்களில் மின்சார வேலிகள், தண்டவாளங்களை அமைத்து தடைகளை ஏற்படுத்தல், முழுமையான வகையில் அனர்த்த எச்சரிக்கை சமிக்ஞை கட்டமைப்பை பொருத்தவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பணிகளுக்கு பின்னர் ஐந்து தினங்களில் யானைகள் ரயிலுடன் மோதுவதை தவிர்ப்பதற்காக சரியான செயற்பாடுகள் தொடர்பில் திட்டத்தை வகுப்பதற்கான பொறுப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் எதிர்வரும் 25ம் திகதி அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவிடம் கையளிக்கப்படவுள்ளது. அமைச்சர் இந்த அறிக்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்று இந்த மாத இறுதிக்கு முன்னர் குறிப்பிட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.