மட்டக்களப்பு- காத்தான்குடி நகரில் வர்த்தக பணியில் ஈடுபட்டு வந்த பிரபல வர்த்தகர் ஒருவர் சனிக்கிழமை(10) மாலை முதல் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று(11) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காத்தான்குடி மூன்றை சேர்ந்த 36 வயதுடைய எ.எல்.எம் முபாறக் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
காத்தான்குடி பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த அவர் நேற்று(11) மாலை கல்லடி ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.