காதலனுடன் ஓட முயன்ற யுவதி இறுதியில் என்ன செய்தாள்?

முன்னர்தான் பார்த்து காதல் வந்தது. இப்பொழுது அப்படியல்ல. தொலைபேசியின் மூலம் பார்க்காமலேயே காதல் வந்து விடுகிறது. இந்த வகை காதல் பற்றிய ஏராளம் செய்திகள் வெளியாகிவிட்டன.

எனினும், ஒவ்வொரு தினுசாக வெளியாகும் செய்திகள் கேட்பவர்களின் தலையை சுற்றவைத்துக் கொண்டுதானிருக்கிறது. இன்றையதினம் பருத்தித்துறை பொலிசார் தலையை பிய்த்துக் கொண்ட காதல்கதையிது.

வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு இரண்டரை மாதங்களின் முன்னர் தொலைபேசியில் ஒரு யுவதி அறிமுகமானார். ஏதோஒரு தவறுதலான இலக்கத்திற்கு வாலிபர் அழுத்த யுவதி சிக்கிக் கொண்டிருக்கிறார். யுவதி உடுப்பிட்டியை சேர்ந்தவர்.

இரண்டு மாதங்களாக இரவு பகலாக தொலைபேசியில் உருகிஉருகி இருவரும் பேசிக் காதலித்துள்ளனர். இரண்டொருமுறை யுவதியை நேரில் சந்திக்க வாலிபர் முயற்சித்தபோதும், யுவதி அதற்கு சம்மதிக்காமல் தொலைபேசியில் குரல்வழியாக காதலித்து வந்துள்ளனர்.

இரண்டு மாத காதல் முற்றி, சில நாட்களின் முன்னர் இருவரும் குடித்தனம் புகும் முடிவெடுத்துள்ளனர். காதலனிற்காக தனது உற்றம், சுற்றத்தையெல்லாம் உதறிவிட்டு வர யுவதி முடிவு செய்தார். ஒரு இரவு வந்து தன்னை ஏற்றிச் செல்லுமாறு யுவதி கூறியிருக்கிறார். எனினும், வாலிபர் அதனை ஏற்கவில்லை. எதற்கு இரவு.. பகலிலேயே வந்து ஏற்றிச் செல்கிறேன்
என கூறி, அதற்கு தகுந்ததாற்போல யுவதியை தயார் படுத்தியுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களின் முன்னர் தனது உடைகளை ஒரு பையில் போட்டுக்கொண்டு யுவதி வெளியேறி உடுப்பிட்டி நகரத்திற்கு வந்துள்ளார். காதலிக்காக வாலிபரும் அங்கு காத்திருந்திருக்கிறார். காதலியை கவர்ந்து வரும் நடவடிக்கையில் வாலிபரின் இரண்டு சினேகிதர்களும் ஒத்தாசையாக சென்றிருக்கிறார்கள்.

காதலியை ஏற்றிக் கொண்டு இரண்டு மோட்டார்சைக்கிள்களில் தமது ஊருக்கு அவர்கள் சென்றிருக்கிறார்கள். குடத்தனை எல்லைவரை பிரச்சனையின்றி சென்றவர்கள், ஊருக்குள் யுவதியை ஏற்றிக் கொண்டு சென்றால் வீண் வில்லங்கமென நினைத்து, ஊரின் வெளிப்புறமான பாதையொன்றினால் சென்றிருக்கிறார்கள்.

எனினும், அவர்களின் துரதிஸ்டம். அங்கும் ஒருவர் கண்டு, இதென்ன கோலமென விசாரித்துள்ளார். மறைக்க முடியாத நிலையில் அனைத்தையும் சொல்லிவிட்டு, புறப்பட்டிருக்கிறார்கள். கதையை கேட்டவர், அவர்கள் புறப்பட்டு வீடு போய் சேர்வதற்குள் ஊரிலுள்ள அனைவரையும் தொலைபேசியில் அழைத்து விடயத்தை சொல்லியிருக்கிறார். வாலிபரும் நண்பர்களும் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு போக, அங்கு ஊரே திரண்டு நின்றுள்ளது.

வாலிபர்களின் நடத்தையை கண்டித்து ஊர்பெரியவர்கள், யுவதியை அவரின் பெற்றோரிடமே ஒப்படைத்து, விரும்பினால் முறைப்படி பெண் கேளுங்கள் என கறாராக கூறிவிட்டனர். இறுதியில், யுவதியின் பெற்றோர் அங்கு அழைக்கப்பட்டனர்.

அங்கு சென்ற யுவதியின் பெற்றோர் அழுது, புலம்பி மகளை தம்முடன் வரச் சொல்லி அழைத்துள்ளனர். பெற்றோரின் கண்ணீரை பார்த்த யுவதியும் தொலைபேசி காதலனை கைகழுவிட்டு, பெற்றோருடன் ஏறி வீடு போய்விட்டார்.

இதுநடந்த சில நாட்களின் பின்னர் மோட்டார்சைக்கிளில் வாலிபரின் வீட்டிற்கு சென்ற இருவர், தம்மை மருதங்கேணி இராணுவமுகாமிலிருந்து வருவதாக கூறி, வாலிபரை படம் எடுத்து, அவரது அடையாளஅட்டை இலக்கத்தையும் பதிவு செய்துள்ளனர். பின்னர், அவரது காதைப்பொத்தி இரண்டு அறை கொடுத்துவிட்டு, அவரையும், மற்ற இரண்டு நண்பர்களையும் முகாமிற்கு வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி முறையிடுவதற்காக வாலிபர் இன்று பருத்தித்துறை பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார்.

வாலிபரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யபொலிசார் தாயரானார்கள். அப்பொழுதுதான் ஒரு அதிர்ச்சி விபரம் வெளிப்பட்டது. வாலிபருக்கு யுவதியின் பெயரை தவிர வேறுவிபரம் ஒன்றும் தெரியாது. யுவதி பறிந்தவருடம், பெற்றோரின் விபரம், முகவரி எதுவும் தெரிந்திருக்கவில்லை.மோட்டார்சைக்கிளில் வந்த தாக்கியவர்கள் பற்றிய விபரம், அவர்கள் பயணம் செய்த மோட்டார்சைக்கிள்இலக்கம் எதுவும் வாலிபருக்கு தெரிந்திருக்கவில்லை.

இந்த விசித்திர காதலனால் இன்று பருத்தித்துறை பொலிசார் நீண்டநேரம் தலையை பிய்த்துக் கொண்டார்கள்.