காபுல் நகரில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் வசிக்கும் பாரசீகர்கள் தங்களது புத்தாண்டை இன்று கொண்டாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வசிக்கும் பாரசீக மக்கள், காபுல் பல்கலைக்கழகம் அருகே உள்ள பி.டி 3 என்ற இடத்தில் இன்று ஒன்று திரண்டு புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில், வெடிமருந்து நிரப்பப்பட்ட காருடன் புகுந்த பயங்கரவாதி திடீரென வெடிமருந்தை வெடிக்கச் செய்துள்ளான். இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடந்த இடத்தை சீல் வைத்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.