காலநிலை வழமைக்கு திரும்பும் வரையில் அதிவேகப் பாதையில் இலவசமாக பயணம் செய்யலாம்

நாட்டில் நிலவும் அசாதாரண கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு வடியும் வரை அதிவேகப் பாதையில் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை கவனத்திற் கொண்டு தென்னிலங்கை அதிவேகப் பாதையின் கடவத்தை தொடக்கம் கொட்டாவை வரையான பகுதியில் இலவசமாக பயணிப்பதற்கான அனுமதியொன்று நேற்றையதினம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த அனுமதி நேற்றைய தினம் நள்ளிரவுடன் முடிவடைந்து விடும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெள்ளம் முற்றாக வடியும் வரையில் கடவத்தை – கொட்டாவை வரையான அதிவேகப் பாதையில் இலவசமாக பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிவேகப் பாதையில் பயணிப்பதற்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.