கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள் அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இன்று (14) மாலை 6 மணிக்கு முன்னர் விடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீள் அறிவித்தல் வரை திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது எனவும் , அதுவரை பல்கலைகழக வளாகத்திற்குள் மாணவர்கள் பிரவேசித்தல் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி மாலை, திருகோணமலை வளாகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள், சித்த மருத்துவ பீட மாணவர்களின் வகுப்புக்குள் பிரவேசித்து அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் திருகோணமலை வளாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த சித்த மருத்துவ பீடத்தின் 9 மாணவர்களும் நிலாவெளி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸாரிடம் நாம் வினவியப் போது, இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களின் தகவல்களை வழங்குமாறு பல்கலைகழகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.