காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு உட்படும் பலர் இன்னும் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கும் குறித்த இந்த தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று(03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
கீதா குமாரசிங்கவுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை இருப்பதனால், அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவி மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினால் பறிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள குறித்த இந்த தீர்ப்புக்கு எதிராக கீதாவுக்கு, உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடியும். உயர் நீதிமன்றத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என தீர்ப்பு வழங்கப்படின், தற்பொழுது பாராளுமன்றத்திலுள்ள பலரின் இருப்புக்கு அது பிரச்சினையாக மாறும் என கூறியிருந்தார்.