கீரியும் பாம்பும் ஒரே அணியில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பங்களாதேஷில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக பதினொருவர் அணிக்கும் ஆசிய பதினொருவர் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடருக்கான ஆசிய பதினொருவர் அணியில் இலங்கையின் லசித் மாலிங்கவுக்கும் திசர பெரேராவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் தேசத் தந்தை ஷெய்க் முஜிபுர் ரெஹ்மானின் 100ஆவது ஜனன தினத்தின் கொண்டாட்ட வரிசையில் இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆசிய அணியில் லசித் மாலிங்க, திசர பெரேரா இந்தியாவின் விராத் கோஹ்லி, லோக்கேஷ் ராகுல், ஷிக்கர் தவான், ரிஷாப் பான்ட், குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி ஆகியோரும் ஆப்கானிஸ்தானின் ராஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், பங்களாதேஷின் முஸ்தாபிஸுர் ரஹ்மான், தமிம் இக்பால், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், மஹ்முதுல்லாஹ் ஆகியோரும் நேபாளத்தின் சந்தீப் லெமிச்சானும் இடம்பெறுகின்றனர்.

உலக பதினொருவர் அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ், க்றிஸ் கேல், பவ் டு ப்ளெசிஸ், நிக்கலஸ் பூரண், ப்றெண்டன் டெய்லர், ஜொனி பெயார்ஸ்டோ, கய்ரொன் பொலார்ட், ஷெல்டன் கொட்ரெல், லுங்கி நிகிடி, அண்ட்றூ டய், மிக்செல் மெக்லெனகன் ஆகியோரும் உள்ளனர்.

இந்நிலையில், லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் அண்மைக்காலமாக முறுகல் நிலையில் இருந்தமையும் அவை சமூக வலைதளங்களில் அதிகளவு பேசப்பட்ட பேசுபொருளாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.