தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குசல் ஜனித் பெரேராவைக் காப்பாற்ற அனைத்து விளையாட்டு ரசிகர்களும் இத்தருணத்தில் அணிதிரள வேண்டும் என காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்த கீதா குமாரசிங்க,
”குசல் பெரேரா எமது கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் ஒரு வீரர். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டி அவரின் கிரிக்கெட் வாழ்வை அழிக்க முனைகின்றனர். இந்த வீரருக்காக நான் குரல் கொடுப்பேன்.
இந்த விவகாரம் குறித்து எமது விளையாட்டுத்துறை அமைச்சர் சிறப்பான பணியை முன்னெடுக்கிறார். இதற்காக அவருக்கு நாம் நன்றி கூறிகிறோம். உண்மையில் இதில் சூழ்ச்சி உள்ளது. நட்சத்திர வீரர் சனத் ஜயசூரியவிற்குப் பின்னர் அவர் பாணியிலேயே குசல் பெரேரா துடுப்பாட்டத்தை முன்னெடுக்கிறார்.
இவரின் விளையாட்டு வாழ்க்கையை அழிக்க இடமளிக்க முடியாது. இதற்கு முன்னர் இவ்வாறான ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்களில் சிக்கிய வீரர்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்று கீதா குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.