குசல் ஜனித் பெரேராவின் இடத்திற்கு மிலிந்த சிறிவர்தன அணியில் இணைப்பு…

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா, இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடன் விளையாடவுள்ள முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குசல் நேற்று(22) CCC மைதானத்தில் இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தின்போது, தொடை எலும்பு உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

எனவே, முதல் போட்டிக்காக இன்று(23) மாலை தம்புள்ளை செல்லவுள்ள இலங்கை அணியின் குழாத்துடன் குசல் பெரேரா செல்ல மாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர் சிறிய அளவிலான உபாதைக்கே உள்ளாகியிருக்கின்றமை மருத்துவ அதிகாரிகளினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், கொழும்பில் இருந்து உரிய விதத்தில் சிகிச்சை மற்றும் ஓய்வு பெற்று, பங்களாதேஷ் அணியுடன் ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெறும் மூன்றாவது ஒரு நாள் போட்டிக்காக அவர் அணியில் இணைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குசல் ஜனித் பெரேராவின் இடத்தை நிரப்புவதற்காக இடது கை துடுப்பாட்ட வீரர் மிலிந்த சிறிவர்தன அணியில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

(rizmira)