குடும்பக் கட்டுப்பாட்டில் திண்டாடும் சீனா

சீனா மக்கள் தொகை எண்ணிக்கையில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவில் ‘‘ஒரு தம்பதியர் ஒரு குழந்தை” என்ற குடும்ப கட்டுப்பாடு கொள்கை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது.

இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு இருந்துவந்ததை தொடர்ந்து, கணவன், மனைவி இருவர்களில் யாராவது ஒருவர் அவர்களது குடும்பத்தில் ஒரே வாரிசாக இருந்தால் அந்த தம்பதியர் 2-வது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு கடந்த 2013-ஆம் ஆண்டில் அறிவித்தது.

இருந்த போதிலும் குடும்ப கட்டுப்பாடுக் கொள்கையை முற்றிலும் திருத்தி அனைவரும் 2-வது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கும் படி சீன மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். மேலும் சீனாவில் முதியோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அரசுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. சீன மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் முதியோர்களாகவே உள்ளனர். இதனால் அங்கு தொழில் திறன் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

இதையடுத்து சீனாவில் அனைவரும் 2-வது குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என கடந்த அக்டோபர் மாதம் சீன கம்யூனிஸ்ட்டு கட்சியின் மையக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த குழு தற்போது இது தொடர்பான வரைவு திருத்த கொள்கையை தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக்குழுவுக்கு அனுப்பி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் திகதி“ஒரு தம்பதியர் 2 குழந்தைகள்” திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.