குமார வெல்கமவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு

ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, குற்றம் சுமத்தப்பட்ட தரப்பின் சட்டத்தரணிகள், அடிப்படை எதிர்ப்பை முன்வைத்ததுடன் குமார வெல்கமவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தொடர முடியாது என வாதிட்டனர்.

வழக்கில் இருந்து தமது தரப்பு வாதியை விடுதலை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல அடிப்படை எதிர்ப்பு தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 22 ஆம் திகதி நடத்துவதாக அறிவித்துள்ளார்.

குமார வெல்கம, போக்குவரத்து அமைச்சராக இருந்த போது இலங்கை போக்குவரத்துச் சபையில் இல்லாத பதவியான பிரதித் தலைவர் பதவியை ஏற்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி இலஞ்ச மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தது.

advertisement