அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்ப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை வாக்கெடுப்பில் குளறுபடிகள் காணப்படுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தும் குழு இன்று(10) கூட உள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்த சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட குழுவொன்றை நியமித்திருந்தார்.இந்தக் குழு இன்றைய தினம் கூட உள்ளதாக நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று கூடும் குழுவின் உறுப்பினர்கள் விசாரணைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய உள்ளதோடு,விசாரணை அறிக்கை அடுத்த நாடாளுமன்ற அமர்வுகளுக்கு முன்னதாக சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும், குறித்த குழுவில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சமால் ராஜபக்ஷ, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
குறைநிரப்புப் பிரேரணைக்கு ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 31 வாக்குகளும் கிடைக்கப் பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.