மஹானாமவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி கலாநிதி ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியவர்களை குற்றவாளிகளாக அறிவித்து கொழும்பு நிரந்தர நீதாய மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

நீண்ட சாட்சி விசாரணைகள் மற்றும் வாய்வழி சமர்ப்பிப்புகளின் பின்னர் வழக்கு விசாரணையை கடந்த 4 ஆம் திகதி நிறைவு செய்த மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வழக்கின் தீர்ப்பினை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.

அதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி கலாநிதி ஐ.எச்.கே மஹானாமவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 65,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலஞ்சமாக பெற்ற 2 கோடி ரூபாவையும் அபராதப்பணமாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல், இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்கவிற்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 55,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனம் ஒன்றிடமிருந்து 02 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஜனாதிபதி ​செயலகத்தின் பிரதானி கலாநிதி ஐ.எம்.கே. மஹானாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி.திசாநாயக்க ஆகியோருக்கு இவ்வாறு சிறைத்தண்டனை வழக்கப்பட்டுள்ளது.