குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி பிரதமரின் வாழ்த்துச் செய்தி

சிறுவர் ஊழியத்தை இல்லாது ஒழித்தல் தினமானது ஜூன் மாதம் 12 ஆம் திகதி நினைவு கூறப்படுகின்றது.

இத்தினத்தினை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில்;

”சிறுவர்கள் விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்படும் இலங்கையானது, சிறுவர்களை ஊழியத்தில் ஈடுபடுத்துவதற்கு எதிராக குரலெழுப்பும் நாடுகளிடையே முன்னணியில் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியிருப்பதானது மகிழ்ச்சிக்குரியதோர் விடயமாகும்.

எமது உன்னதச் சொத்தான பிள்ளைகளே நாட்டின் எதிர்காலம் என்பதனை தெளிவாக உணர்ந்துள்ள தற்போதைய அரசாங்கமானது சிறுவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களது வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும் பலமான வகையில் தலையிட்டு நடவடிக்கைகள் பல மேற்கொண்டு வருகின்றன.

சர்வதேச சிறுவர் உரிமைகளுக்கமைய தொழிலில் ஈடுபடுவதற்கான தகைமையைப் பெற்றுக் கொள்வதற்கு 14 வயதைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

ஆனாலும் இலங்கையில் 18 வயது வரை பிள்ளைகளுக்கு சிறுவர் உலகில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையுண்டு என்பதனை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

12 வயதிலும் குறைந்த சிறுவர்களை தொழில்களில் ஈடுபடுத்தாமலிருப்பதற்கு 2010 ஆம் ஆண்டு முதல் நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

அத்துடன் 12 – 18 இடைப்பட்ட வயதையுடைய சிறுவர்களை ஆபத்தான கைத்தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டவிரோதமான செயலாக இருப்பதுடன் அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

சிறுவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதவாறு வன்முறையைப் பிரயோகித்து அவர்களை எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுத்துவது பாரியதோர் குற்றமாகும்.

ஆனாலும், வறுமை மற்றும் குடும்ப உறவில் ஏற்படும் வீழ்ச்சி, அறியாமை போன்ற காரணங்களே பிள்ளைகளை தொழில்களில் அமர்த்துவதற்கான காரணிகளாக அறியப்பட்டுள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல், சிறுவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவை பிரஜைகளாகிய எம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

சிறுவர்கள் மீது அன்பு செலுத்தி, பாராட்டி, பாதுகாப்பு வழங்கி, அவர்களுக்கு தரமான கல்வியைப் பெற்றுக் கொடுத்து எதிர்கால உலகிற்குப் பொருத்தமான பிரஜைகளாக அவர்களை உருவாக்குவதற்கு சிறுவர் ஊழியத் தொழில் முறை ஒழிப்பு தினத்தில் விசேடமாக திடசங்கற்பம் பூணுவோம்” என வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.