சீனாவில் உள்ளதைப் போன்று கூட்டுறவு கிராமங்களை இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில் சீனா கூட்டுறவு பிரதான சங்கத்தின் தலைவரும், சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
வியாட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்வினையடுத்து இந்தச் சந்திப்பு, ஹனோயில் அமைந்துள்ள ஹோட்டல் மிலீயாவில் இடம் பெற்றது.
குறிப்பாகச் சீனா அரசாங்கம் இலங்கையுடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் கூட்டுறவு துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், 2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி சீற்றத்தினையடுத்து, அம்மக்களது வாழ்வாதார மற்றும் அவசர தேவைகளுக்காக சீன கூட்டுறவு சங்கம் உதவியதாகச் சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இலங்கை கூட்டுறவு ஆணையாளர் சுலைமான் லெப்பை நசீர், தேசிய கூட்டுறவு கவுன்சிலின் செயலாளர் அசன்க ஆகியோரும் குறித்த இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.