வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடர் தோல்வி காரணமாக இந்திய அணி கெப்டன் டோனி பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அது தவிர, அணியில் வீரர்களுக்குள் ஒற்றுமையின்மை காரணமாகத்தான் இத்தோல்வி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறுகையில்;
கெப்டன் டோனி இந்தியாவுக்காக நிறைய பெருமை சேர்த்துள்ளார். இதை நாம் எளிதில் மறந்து விடக்கூடாது. மோசமான தோல்விகள் வரும் போது, பழைய புள்ளி விவரங்கள் எடுபடாது எனத் தெரியும். அதேநேரம் அணியின் ஒட்டுமொத்த தோல்விக்காக கெப்டன் டோனியை மட்டும் குற்றம் சுமத்துவது அழகல்ல.
இக்கட்டான நேரத்தில் தான் கெப்டனுக்கு ஆதரவு தர வேண்டும். இப்போது இல்லாமல் அப்புறம் எப்போது இதைச் செய்வது. ராணுவத்தில் கெப்டனை பின்தொடர்ந்து செல்லவில்லை எனில் குண்டுகள் துளைக்கலாம்.
இந்திய அணியிலும் அப்படித்தான், என்னைப் பொறுத்த வரையில் ஒருவேளை களத்தில் மரணம் அடையும்படி கெப்டன் கூறினால், அப்படியே உயிரை மைத்து விடுவேன்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் விளையாடவில்லை என்பதே உண்மை.
இதற்காக வீரர்கள் ‘டிரசிங் ரூமில்’ எவ்வித குழப்பமும் இல்லை.
எப்போதும் போன்ற சூழல் தான் உள்ளது.
இன்றைய போட்டியில் எங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாடி வெற்றிக்கு முயற்சிப்போம்.
மேலும், வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான் சிறப்பாக செயல்படுகிறார். இவரின் திறமைக்கு மதிப்பு அளிக்கின்றோம். அதற்காக அவரை கடத்திச் செல்லவா முடியும். இவரின் பந்து வீச்சை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என சிந்திப்போம் என்றார் அஷ்வின்.