கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான் : ஞானசார பல்டி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பௌத்த மக்களின் உரிமைகளை பாதுகாக்க முன்னெடுத்த தேசிய செயற்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் சட்டங்களை இயற்றவே கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“.. அபேஜன பல கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. தேசியப்பட்டியல் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் பல குறிப்பிடப்படுகின்றன.

பதவிகளுக்காக தேரர்கள் முரண்பட்டுக் கொள்ளும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. இவ்வாறான நிலைமை பௌத்த மத கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது.

பௌத்த மத உரிமைகளை பாதுகாப்பதற்கு பாராளுமன்றம் செல்ல வேண்டிய தேவை கிடையாது. கடந்த காலங்களில் பல பிரச்சினைகளுக்கு தனித்து போராடி வெற்றி கண்டோம்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்தாலும், கிடைக்காவிடினும் பௌத்த மதம் மற்றும் சிங்கள மக்களின் உரிமைகளை பாதுகாக்க இதுவரை காலமும் முன்னெடுத்த தேசிய செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்போம்.

நாட்டில் மறைமுகமாக எழுச்சிப் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்க தேவையான சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றிக்கொள்ள வேண்டும்.

இதற்காகவே தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கிறோமே தவிர அரச வரப்பிரசாதங்களை பெறுவதற்கு அல்ல என கூறினார்.

அத்துடன் பயங்கரவாதி சஹ்ரானால் எங்களையும், எமது கொள்கைகளையும் வீழ்த்த முடியவில்லை. ஆனால் எம்மவர்கள் தற்போது குறுகிய நோக்கங்களை கொண்டு தேசியத்துக்கு துரோகமிழைக்கிறார்கள்.

எனினும் எமது கொள்கை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கிய 67,000 மக்களின் எதிர்பார்ப்புக்களையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்..” எனவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.