கேப்பாபுலவு மக்களது காணி மீட்புக்கு தீர்வின்றேல் நாடு தழுவிய போராட்டம் – ஜே.வி.பி எச்சரிக்கை…

முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்களது காணிகள் மீட்புப் போராட்டத்திற்கு விரைவில் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், வடக்கு கிழக்கு உட்பட நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும் சாத்தியம் காணப்படுவதாக ஜே.வி.பி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்த கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் அதன்பின் கிளிநொச்சியில் நேற்று(16) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன கேப்பாபுலவு மக்களது காணி விடுவிப்பு குறித்து வெளியிட்டுள்ள கருத்து குறித்து கண்டனம் வெளியிட்ட இராமலிங்கம் சந்திரசேகரன்;

குறித்த மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக போராடி வருவதாக சுட்டிக்காட்டியதோடு, குறித்த காணிகள் தொடர்பாக அரசாங்கம் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தாங்கள் வசித்த தமது காணிகளை மீளவழங்குமாறு கேப்பாபுலவு மக்கள் வலியுறுத்துவதாக கூறினார்.

இதேவேளை காணி விடுவிப்பு குறித்து இராணுவத்திடம் வினவும் போது உயர் அதிகாரிகள் அனுமதித்தால் காணிகளை விடுவிப்பதற்கு தயார் என்று தெரிவிப்பதாகவும், இந்த காணி பிரச்சினை என்பது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் இதற்கு அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் கேப்பாபுலவு மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தத்தை பிரயோகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.