கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கோரிக்கை…

பரீட்சைகள் கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய நிலையில், பரீட்சைகள் நிலைய ​தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு நாளொன்றுக்கு 1,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது. கண்காணிப்பு அதிகாரிக்கு, நாளொன்றுக்கு 1,300 ரூபாய் வழங்கப்படுகின்றது. மேலதிக கண்காணிப்பாளருக்கு 1,200 ரூபாயும், ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு 1,700 ரூபாயும், புதிதாக நியமிக்கப்பட்ட மேலதிக நிலைய அதிகாரிகளுக்கு 1,500 ரூபாயும் ​கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது என, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை, போக்குவரத்துக் கட்டணமாக 600 ரூபாயும் சிலருக்கு 2,100 ரூபாயும் வழங்கப்படுகின்றது என்று குறிப்பிட்ட அவர், தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பளம் 1,500 ரூபாயாகும் எனவும் மேசன்களுக்கு நாளொன்றுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படுகின்றது என்றார்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தொழிலாளர்களின் சம்பள அளவுத்திட்டத்துக்குள் இழுத்து விடப்பட்டுள்ளமையால், பலருக்கும் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுவதில் அதிருப்தி கொண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.