கொடுப்பனவு வழங்குவதற்கு நாங்கள் எதிர்ப்பில்லை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளாந்த வருகை கொடுப்பனவாக வழங்கப்படும் 2,500 மற்றும் 1 இலட்சம் ரூபாய் மாதாந்த கொடுப்பனவு என்பவற்றை பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்ன, தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இதனைக் கூறினார்.   இதன்போது, “நாடாளுமன்றத்தில் அதிகமான பணிகள் செய்யவேண்டியுள்ளதன் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில் அதன் பயனைக் காணமுடியாதுள்ளது” என, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.   அதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்ன, நாடாளுமன்றத்தில் தலைவர்கள் தான் தவறிழைக்கின்றனர் என்று கூறியுள்ளார்.   மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஒரு வாரம் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட சம்வம் தொடர்பில் கேட்டபோது, அதில் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்று தினேஷ் தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்ற நடவடிக்கைக்கு இடையூறு செய்தமையால் தினேஷ் குணவர்தனவை அகற்ற, நாடாளுமன்ற அவைக்குள் பொலிஸார் வந்திருந்தனர்.   இந்நிலையில், அவைக்குள் பொலிஸார் வருவது சம்பிரதாயம் என்று படைக்கல சேவிதகர் தெரிவித்தாலும், அவ்வாறு பொலிஸார் வருவது சம்பிரதாயம் அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.  

பேராசிரியர் பெல்லன்விட விமலரத்ன தேரர், நாடாளுமன்றத்தை பைத்தியக்காரர்கள் பெட்டிக்கு ஒப்பிட்டு கூறியமை தொடர்பில் கருத்து வெளியிட்ட தினேஷ், அரசாங்கத்தின் ஜனநாயக விரோத காரியங்கள் காரணமாக, நாடாளுமன்றம் அவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.