கொண்டயாவையும் என்னையும் சமமானவர்களாக சித்திகரிக்கும் ஊடகங்கள் – யோஷித

கொட்டதெனியாவ சிறுமி சேயா பாலியல் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொண்டயாவின் நிலை தனக்கும் ஏற்பட்டுள்ளதாக யோஷித்த ராஜபக்ஷ  அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சிறுமி சேயாவின் கொலைச்சம்பவத்தில் கொண்டயா அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டது போன்றே தான் வஸீம் தாஜுதீன் கொலை விவகாரத்தில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக யோஷித்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,

அதாவது, கையெழுத்துப் போடக் கூடத் தெரியாத எழுத வாசிக்கத் தெரியாத கொண்டயாவும், இங்கிலாந்தில் படித்த நானும் தற்போது ஒரே நிலையில் குற்றம் சாட்டப்படுகின்றோம் என்று அவர் தன்னைத் தானே பெருமையடித்துக் கொண்டுள்ளார். ஆனாலும் அவர் இலங்கையில் ஒழுங்கான முறையில் சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையவில்லை என்பதும் அதிகாரம் மற்றும் பணபலத்தைக் கொண்டே கடற்படையின் ஊடாக இங்கிலாந்தில் கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டியது என்பதும் பகிரங்க ரகசியமாகும்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள யோஷித்த , சிறுமி சேயாவின் கொலைச்சம்பவத்தில் கொண்டயா நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட பின் அவரது அண்ணன் மீது குற்றம் சுமத்தப்பட்டது  போன்றே தற்போது தனது அண்ணன் நாமல் ராஜபக்ஷவையும் வஸீம் தாஜுதீன் வழக்கில் சிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக யோஷித்த குற்றம் சாட்டியுள்ளார்.

எதுவித குற்றமும் செய்யாத தங்களுக்கு எதிராக ஊடகங்களே குறித்த பிரச்சாரங்களை முன்னெடுப்படுதாகவும் , எனினும் நீதித்துறையின் மூலம் தமக்கு விடுதலை கிடைக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் யோஷித்த மேலும் தெரிவித்துள்ளார்.