கொரிய தீபகற்பத்தில் இராணுவ ஒத்திகை கால வரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்க தலைவர் மற்றும் வடகொரிய தலைவர்களின் சந்திப்புக்கு பின்னர் சில ஒப்பந்தங்கள் இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானது. அதில், வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பது, வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு உலக நாடுகள் அனைத்தும் வரவேற்பை தெரிவித்தன.
இந்நிலையில், கொரியா தீபகற்பத்தில் அமெரிக்கா அடிக்கடி நடத்தி வந்த இராணுவ ஒத்திகைகள் கால வரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் – கிம் சந்திப்புக்கு பிறகு இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரிய தீபகற்பத்தில் சுமார் 3 லட்சம் அமெரிக்க இராணுவ வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.