கொரோனாவால் தொழிலை இழந்தோர் கவனத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தொழிலை இழந்துள்ள தனியார் துறை பணியாளர்கள் தொடர்பான விபரங்களை தொழில் திணைக்களத்திடம் கையளிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொழிலை இழந்துள்ள நபர்களுக்கு அரசாங்கத்தினால் ஏதேனும் சலுகைகளை பெற்றுக்கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயும் வகையில் இந்த கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, கொரோனா தொற்று பரவல் காரணமாக தொழிலுக்கு செல்ல முடியாமையினால், குறித்த நிறுவனமொன்றினால் தொழிலில் இருந்து நீக்கப்பட்டமை அல்லது வேறு அசௌகரியங்கள் காரணமாக தொழிலை இழக்க நேரிட்டமை ஆகிய காரணங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது விபரங்களை இதனூடாக வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தொழிலை இழந்துள்ள தனியார் துறை பணியாளர்கள் தமது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், சம்பளம், தொழில் வழங்குனரின் விபரம் உள்ளிட்ட தகவல்களை தொழில் திணைக்களத்திடம் கையளிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, அனைத்து விபரங்களும் உள்ளடக்கப்பட்ட கடிதங்களை கொழும்பு 5 இல் அமைந்துள்ள தொழில் காரியாலயத்துக்கு ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தொழில் அமைச்சின் 0112 36 85 02 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது irlabour456@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு இது தொடர்பில் அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.