(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சீனாவில் இனங்காணப்பட்டுள்ள இந்த வைரஸ் இன்று வரையில் உலகில் பல நாடுகளில் பதிவாகியுள்ளது. அதுவே 2019 – நொவல் கொரோனா வைரஸ் (2019 – nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இனங்காணப்பட்ட இவ் வைரஸ் தொற்று 2020 ஜனவரி மாதம் 23ஆம் திகதி வரையும் சீனாவுக்கு அப்பால் ஜப்பான், தாய்லாந்து, தாய்வான், ஐக்கிய அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளிலும் பதிவாகி இருக்கின்றது.
சீனாவின் மத்திய மாகாணமான உஹான் மாநிலத்தில் முதலில் இனம் காணப்பட்ட இவ் வைரஸ் தற்போது அந்த நாட்டின் 13 மாநிலங்கள் வரையும் பரவியுள்ளது.
இன்று வரையில் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களாக இனம் காணப்பட்டவர்கள் அனைவரும் உஹான் மாகாணத்திற்கு சென்று வந்தவர்கள் என்பதை சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
என்றாலும் இவ்வைரஸ் தொற்றுக்கு கடந்த வியாழக்கிழமை வரையும் 571 பேர் உள்ளாகியுள்ளனர். அவர்களில் பலர் உயிரிழந்திருப்பது உலகளாவிய ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது மனிதர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்ற 2019 – நொவல் கொரனா வைரஸ் (2019 – nCoV) மனிதர்கள் முன்பு இனம் காணப்படாத ஒரு திரிபாக விளங்குகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இவ் வைரஸ் மிருகங்களில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டுள்ளதாக சீன மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதனால் விலங்குகளுடன் பாதுகாப்பற்ற முறையில் நேரடி தொடர்பை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டையை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
என்றாலும் இவ் வைரஸ் தற்போது ஆளுக்காள் பரவும் நிலையை அடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தடிமல் போன்ற மேல் சுவாச குழாய் நோய்கள் இலேசாக வெளிப்படலாம். ஆனால் கீழ் சுவாசக் குழாயையும் பாதிக்கலாம். குறிப்பாக இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கடும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகளும் வெளிப்படுகின்றன என்று சீனாவின் சுகாதார தேசிய ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.
அதேநேரம் மூக்கிலிருந்து நீர் வடிதல், தலைவலி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வான நிலை என்றபடியும் அறிகுறிகள் ஏற்பட முடியும்.
இவ்வைரஸ் தாக்கம் சில சமயம் மூச்சு குழாய் அழற்சி போன்ற கீழ் சுவாச குழாய் நோய்களை ஏற்படுத்தி தீவிர நிலையை அடையலாம். அதன் விளைவாக நிமோனியா, மூச்சு குழாய் அழற்சி ஏற்பட்டு ஈரல் பலவீனமடையலாம்.
சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படலாம். இவரை பெரும்பாலும் உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம்.

அதன் காரணத்தினால் சாதாரண தேகாரோக்கியம் கொண்டவர்கள் இந்நோய்க்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணும்போது இவ்வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு அதிகமென சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர்கள் இவ் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேண வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இது புதிதாக இனங்காணப்பட்டுள்ள வைரஸாக விளங்குவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது தவிர்த்துக் கொள்வதற்கான விஷேட மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது.
இவ்வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தவிர்த்துக் கொள்வதற்கும் தடுப்பு மருந்துகளையோ மாத்திரைகளையோ கண்டுபிடித்து புழக்கத்திற்கு விட சிறிது காலம் எடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் விளைவாக இலங்கை உட்பட உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டுக்குள் இவ் வைரஸ் தொற்று வந்து சேர்வதைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை விரிவான அடிப்படையில் முன்னெடுத்துள்ளன.
சீனாவுக்கு செல்வது தொடர்பிலும் அங்கு சென்று வருபவர்கள் தொடர்பிலும் ஒவ்வொரு நாடும் விஷேட கவனம் செலுத்துகின்றன.
இதன் நிமித்தம் விமான நிலையங்களிலும் விஷேட மருத்துவ சோதனை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆகவே கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்த்து கொள்வதில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் செயற்படுவது மக்களின் பொறுப்பாகும்.