இரத்மலானை விமான நிலையத்திலிருந்து, விமானமொன்றைக் கடத்தி, கொழும்பு -03, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடத்தி, தூதரகத்தை முழுமையாகத் தகர்ப்பதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
பிரபல சிங்கள பத்திரிகைகளில் ஒன்றான, ஞாயிறு(02) லங்காதீப பத்திரிகையில் வெளியாகியுள்ள மேற்படி செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
குறித்த இந்தக் கடத்தல் திட்டம் தொடர்பில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு, பிரதமர் ரணில் விக்கிமசிங்கவுக்கு அறிவித்துள்ளது.
அதையடுத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும், அமெரிக்காவின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிலர், இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டமிட்டுள்ளதன் பிரகாரம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின், தற்கொலை குண்டுதாரி, இரத்மலானை விமான நிலையத்துக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் நுழைந்து, சிறியரக விமானமொன்றைக் கடத்தி, அதைப் பயன்படுத்தியே, கொழும்பு -03 கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தை தகர்ப்பதற்கு திட்டமிட்டுள்ள தகவல் கசிந்துள்ளது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன், இலங்கைப் பிரஜை எவராவது தொடர்புகளை கொண்டிருந்தால், அவை தொடர்பிலும் தேடியறிந்து அமெரிக்காவுக்கு அறிவிக்குமாறு, அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இந்தத் தகவலால் அமெரிக்க தூதுவராலயத்தில் கடமையாற்றுவோரில் பலர், பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும், தலைமையதிகாரிகள் பலர், கூடுதலான நேரம் காரியாலயத்தில் இருப்பதற்கு அச்சமடைந்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)