கொழும்பு ஹைட் பார்க் மைதானம் திருத்த வேலைகள் காரணமாக இன்று (30) முதல் காலவரையறையின்றி மூடப்படவுள்ளதாக கொழும்பு நகர ஆணையாளர் வீ.கே.ஏ. அனுர தெரிவித்துள்ளார்.
இதனால், எதிர்வரும் நாட்களுக்கு செய்யப்பட்டிருந்த சலக இடஒதுக்கீடுகளும் கால வரையறையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாளை மறுதினத்துக்கென செய்திருந்த இடஒதுக்கீட்டுக்கான ஒப்பந்தமும் இதனால் ரத்தாவதாக ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மைதானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள முற்பணம் திருப்பி வழங்கப்படும் எனவும், விரும்புபவர்களுக்கு அதன் புதுப்பித்தல் நடவடிக்கை முடிந்த பின்னர் பிற்பட்ட திகதியொன்றில் தினமொன்று ஒதுக்கித் தர முடியும் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியின் நடைபவனி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இதன் இறுதி நாள் நிகழ்வுகள் நாளை மறுதினம் 01 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது