கோட்டபாய குறித்த ஜனாதிபதியின் கருத்து குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்த கோரிக்கை.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைத்தமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதமொன்று நடத்த கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர்.

சர்ச்சைக்குரிய அவன்காட் நிறுவன வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் கடற்படை உயரதிகாரிகள் மூவர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த இந்த வழக்கில் பிணை கிடைக்கும் வரை கோட்டாபய ராஜபக்ஷ சிறிதுநேரம் நீதிமன்ற விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரிகளை இவ்வாறு விசாரணைக்கு அழைத்திருந்தமை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

அத்துடன் தன்னிடம் வினவாமலேயே பொலிஸ் நிதிமோசடி பிரிவினர் மற்றும் இலஞ்ச   ஊழல் அதிகாரிகள் இந்த விடயத்தில் செயற்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி கண்டித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்தப் பேச்சு தென்னிலங்கை அரசியல் களத்தில் சூடுபிடித்திருக்கும் நிலையில் அடுத்தவாரம் கூடவுள்ள நாடாளுமன்றத்தில் இது குறித்த விவாதமொன்றை நடத்த சபாநாயகரிடம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை விடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.