(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிக அதிகாரங்கள்; நாடாளுமன்றுக்கு அதிக அதிகாரங்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது போன்ற அரசியலமைப்பு திருத்தங்கள் நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோருடன் திருத்தங்கள் தொடர்பான இறுதி மீளாய்வு மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தமாக ஏற்கனவே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்த சட்டமூலம், உத்தேச திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் 19 ஆவது திருத்தத்தின் மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் முன்மொழிகளை உள்ளடக்கியுள்ளதாக விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்று அதன் பின்னர் கூடிய விரைவில், அதனை நாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அர்த்தமுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் கொள்வனவு மற்றும் தணிக்கை ஆணைக்குழுக்களை மீள அறிமுகப்படுத்துதல் ஆகியவை முன்மொழியப்பட்ட திருத்தங்களின் முக்கிய அம்சங்களாகும்.