முக்கிய முடிவுகளை எட்டுவதற்காக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), எதிர்வரும் புதன்கிழமையன்று கூடவிருக்கின்றது என்று, ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக்காலம், இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில், அவரின் பதவிக்காலத்தை நீடிக்கக்கூடாதென ஆளும், எதிர்த்தரப்பைச் சேர்ந்த பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் கோப் ஆராய்ந்து, அறிக்கையிடவுள்ளது. அந்த அறிக்கை கிடைக்கும் வரையிலும், கடமையிலிருந்து தான் விலகி நிற்பதாக அர்ஜுன மகேந்திரன் அறிவித்திருந்த நிலையிலேயே விஜித ஹேரத் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, பெலவத்தையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (26), நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, கோப் குழுவின் உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகேயே தெரிவித்தாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.
இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். கோப் குழுவிலிருந்து பிரசன்ன ரணதுங்க எம்.பி, கடந்த 18ஆம் திகதியன்று நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாகவே மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி, கோப் குழுவுக்கு நியமிக்கப்பட்டார். அவர், உள்வாங்கப்பட்டு ஒரு மாதமே ஆகின்றது. ஆனால், மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனின் விவகாரம், மத்திய வங்கியின் கணக்கு அறிக்கை தொடர்பில்; ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோப் குழுவினால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே கணக்காய்வாளருக்கு கட்டளையிடப்பட்டது’ என்றார்.
( நன்றி – பாநூ கார்த்திகேசு )